சபரிமலைக்கு வருகை தரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது: கேரள அமைச்சர் அறிவிப்பு

இடதுசாரி அரசு
திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வருகை தரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது என கேரள சட்ட அமைச்சர் ஏகே பாலன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
அதேநேரம் சபரிமலையில் பெண்கள் மலையேற முயன்றால் எப்படி அதை அரசு கையாளும் என்பதை தெரிவிக்க கேரள அரசு மறுத்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபட எந்த தடையும் இல்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அறிவித்த உடனேயே, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, "நாத்திகப் பெண்களை" யாத்ரீகர்களாக சபரிமலைக்கு அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேரள அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், சபரிமலைக்கு பெண்களை மலையேற அனுமதிக்க அரசு முன்முயற்சி எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இதற்கிடையே சபரிமலை தீர்ப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், "சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவில்லாமல் உள்ளது. இந்த தீர்ப்பு மேலும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. அதன் தாக்கத்தை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் சட்ட நிபுணர்களை அணுகி ஒரு நிலைப்பாட்டை வகுப்போம்.தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், சபரிமலை வரும் பெண்களை அனுமதிக்கும் முடிவில் அரசு இருக்கிறதா என்று கேட்டனர் அதற்க பினராயி விஜயன், "அதைப் பற்றி விவாதிக்கவும் முடிவு செய்யவும் போதுமான நேரம் இருக்கிறது" என்றார்.

இதனிடையே கேரள சட்ட அமைச்சர் ஏகே பாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்ததீர்ப்பு அரசுக்கு அதிக சிக்கலை உருவாக்கும் சபரிமலைக்கு வருகை தரும் எந்த ஒரு பெண் பக்தர்களுக்கும் கேரள அரசு பாதுகப்பு அளிக்காது என்றார்.

இதன் மூலம் கடந்த ஆண்டு எடுத்த முடிவுக்கு முற்றிலும் மாறுபட்ட முடிவினை கேரளா அரசு இந்த முறை எடுத்துள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் சுவாமியை பார்வையிட முயன்ற சில பெண்களுக்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு பாதுகாப்பு அளித்தது.

Comments