
மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி தலைமையிலான கூட்டணி அரசு உருவாவதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவும் முடிவு செய்திருந்தன.
ஆனால் மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான ஆட்சி இன்று பொறுப்பேற்றது. இதில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஆளுநர் பாஜகவுக்கு அவகாசம் வழங்கிவுள்ளார். இதனால் இனி குதிரை பேரம் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அனைத்து கட்சிகளும் தங்கள் எம்எல்ஏக்களை பொத்தி பாதுகாக்க தொடங்கிவிட்டன.
இதையடுத்து சிவசேனா எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூருக்கும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் போபாலுக்கும் அனுப்பப்படவுள்ளனர். அங்கு வரும் 30-ஆம் தேதி வரை ரிசார்ட்களில் தங்கியிருப்பர் என கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைக்க தயாராக இருந்த நிலையில் ஒரு நாள் இரவில் மகாராஷ்டிராவில் காட்சிகள் மாறிய நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்த ரிசார்ட் அரசியல் இனிதே தொடங்குகிறது.
அது போல் என்சிபி எம்எல்ஏக்கள் இன்னும் உஷார் நிலையில் வெளியூருக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவாரும் என்சிபி எம்பி சுனில் தாட்கரே மற்றும் என்சிபி எம்எல்ஏக்கள் திலிப் வால்ஷ் பாட்டீல் மற்றும், ஹாசன் முஷ்ரப் ஆகியோருடன் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வீட்டை சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments