மகாராஷ்டிரா புதிய அரசுக்கு எதிரான வழக்கில் காரசார வாதம்- நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்

Maharashtra: SC to Decide on Floor Test Today மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக பாஜகவின் பட்னாவிஸ்; துணை முதல்வராக என்சிபியின் அஜித்பவார் பதவி ஏற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக- என்சிபி அஜித் பவார் பிரிவு புதிய அரசை அமைத்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்திருந்த என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது, அப்போது, ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவு கடிதங்களை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்திய அரசு, ஆளுநர் தரப்பு உள்ளிட்டோர் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. மேலும் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. முதலில் ஆளுநரின் செயலாளர் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தமது வாதங்களை முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அஜித் பவார் சார்பில் மணீந்தர்சிங், சிவசேனா சார்பில் கபில்சிபல், என்சிபி சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Comments