ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர் - ஜெயக்குமார்

அரசியல் பிரச்சனை சென்னை: தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் ஆனால் நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் உலகிற்கும் சினிமா நடிகர்களுக்கும் தற்போது பிரச்சனை எழ தொடங்கி உள்ளது. தான் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம் செய்தார். இதனால் அதிமுக மற்றும் ரஜினிக்கு இடையில் சண்டை வந்தது. இதில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அதோடு ரஜினியோடு இணைந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் செய்ய தயார் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல் நடிகர் ரஜினியும், கமலும் தமிழகத்தை ஆண்ட பின் விஜய்க்கு வழி விட வேண்டும் என்று விஜயின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் குறிப்பிட்டார். இதனால் தற்போது அதிமுகவினர் விஜய், ரஜினி, கமல் மூன்று பேரையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் கடுமையான வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த அரசியல் பிரச்சனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அவர்கள் எல்லோரும் கானல் நீர் போன்றவர்கள்.

அவர்கள் இன்னும் சில நாட்களில் காணாமல் போவார்கள் அவர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். அவர்களை நம்பி பின்னால் செல்லும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைவார்கள். நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர். அவர் நேர்மையான நடிகர்.

Comments