கடல் அரிப்பால் காலியாகும் கடற்கரைகள்.. நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்

mp kanimozhi urges central govt to stop sea erosion டெல்லி: "கடல் அரிப்பால் கடற்கரைப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்க நீண்ட கால திட்டம் தேவை" என்று மக்களவையில் திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இன்று லோக்சபாக் கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி. ஜீரோ ஹவர் நேரத்தில் இந்த பிரச்சினையைக் கிளப்பிப் பேசினார். கனிமொழியின் பேச்சிலிருந்து.

"இந்தியா தனது கடற்கரைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை கடல் அரிப்பின் காரணமாக இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 41% கடற்கரைப் பகுதிகள் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் போய்விட்டன. எனது தொகுதியான தூத்துக்குடி அதிக அளவு கடற்கரைப் பரப்பைக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில், நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்குள் மீனவ கிராமங்களில் பாதியளவுக்கு கடலுக்குள் போயிருக்கின்றன. இது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல். அரசாங்கம் கடல் அரிப்பைத் தடுக்க சுவர்கள் கட்டுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது தற்காலிகமான நடவடிக்கைதான். இந்தியா முழுதும் நிலவும் இதுபோன்ற அசாதாரண கடற்கரை சூழலில் கடல் அரிப்பை தடுத்து கடற்கரையையும், மீனவர்களையும் காப்பாற்ற நீண்ட கால திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசின் திட்டம் என்பதை அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கனிமொழி எம்பி.

Comments