மகா. உட்பட மாநிலங்களில் ஆட்சியை இழந்து வரும் பாஜக- ஆட்சி கவிழ்ப்பு, கட்சி வளைப்பு மட்டும் வியூகம்!

3 நாட்களில் கவிழ்ந்த பாஜக அரசு டெல்லி: மகாராஷ்டிரா உட்பட அடுத்தடுத்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை தொடர்ந்து இழந்து வருகிறது. தற்போதைய நிலையில் சில மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், கூட்டணி அரசுகள் என 17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த போது 7 மாநிலஙகளில் அதன் ஆட்சி இருந்தது. அப்போது வீசிய மோடி அலையும் இதற்கு காரணமாக கூறப்பட்டது.

2015-ம் ஆணடு மேலும் 6 மாநில சட்டசபை தேர்தல்களில் வென்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. 2016-ல் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு நாட்டின் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தது.

இதனால் காங்கிரஸ் அல்லாத பாரதத்தை நோக்கி முன்னேறுகிறோம் என பாஜக தலைவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்கள் எதுவும் பாஜகவுக்கு மகிழ்ச்சியை தரக் கூடியதாக இருக்கவில்லை.

தற்போதைய நிலையில் 17 மாநிலங்களில் மட்டும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. கர்நாடகா, கோவா, உத்தர்காண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவைதான் பெரிய மாநிலங்கள். மற்றவை அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களில்தான்.

இதில் கூட கோவாவில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததிலும் சர்ச்சை- அதாவது கோவாவில் 2017 தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக காங்கிரஸ் இருந்தது. ஆனால் 2-வது கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். அத்துடன் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு நாங்களும் ஆட்சி அமைத்தோம் என பெருமிதப்பட்டது பாஜக.

கர்நாடகாவிலும் இதே நிலைமைதான். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடியூரப்பாவை முதல்வராக்கினார் ஆளுநர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைந்தது. இந்த இரு கட்சிகளின் 17 எம்,எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஜேடிஎஸ் அரசை கவிழ்த்து இப்போது ஆட்சியில் உட்கார்ந்துள்ளது பாஜக.

ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஜேஜேபிக்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பேரங்களைப் பேசித்தான் ஆட்சியை கைப்பற்றியது.

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில், காங்கிரஸை அப்படியே கபளீகரம் செய்து இடதுசாரிகளை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக. சிக்கிமில் எஸ்டிஎப் கட்சியின் 14 எம்.எல்.ஏக்களில் 13 பேரை அப்படியே வளைத்துப் போட்டு கால் பதித்தது பாஜக.

அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூரில் மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது பாஜக. இந்த நிலையில்தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது பாஜக. அதுவும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

105 இடங்களைப் பெற்ற பாஜகவால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. எப்படியும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தே தீருவது என்ற முடிவோடுதான் தேர்தலுக்கு முன்னரே சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீட்டில் மல்லுக்கட்டியது. தேர்தலுக்குப் பின்னர் சிவசேனா இல்லாமல் ஆட்சிஅமைக்க முடியாது என்ற இடியாப்ப சிக்கலில் மாட்டியது பாஜக. ஒருகட்டத்தில் பாஜகவுடனான உறவை நீண்டகால நட்பு கட்சியான சிவசேனாவே முறித்துக் கொண்டது.

பின்னர் என்சிபியை வளைத்துப் போட்டு ஆட்சியை கைப்பற்ற பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. தற்போது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை பாஜக எதிர்கொண்டிருக்கிறது.

கடந்த ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. மாநில கட்சிகளின் ஆதரவுடனும் கட்சி வளைப்பு யுக்தியின் மூலம்தான் அங்கே ஆட்சியில் அமர்ந்தது. இம்முறையும் பாஜகவுக்கான வாய்ப்பு அங்கு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஒட்டுமொத்தமாக பல மாநிலங்களின் களநிலவரம் அடிப்படையில் பாஜகவுக்கு எதிராகவே இருப்பதையே தேர்தல் முடிவுகள், வியூகங்களின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

Comments