
தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு வகையான விலை நிலவுகிறது. உதாரணத்திற்கு கோவையைவிடவும், சென்னையில் வெங்காயத்தின் விலையில் நிறைய அதிகரிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், வெங்காய விலை உயர்வு பற்றி ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று, தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி.யான கனிமொழி இன்று சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். இதை சபாநாயகர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி, கனிமொழி பேசுகையில், வெங்காயத்தின் விலை 4 மடங்கு அதிகரித்துவிட்டது. மிடில் கிளாஸ் மக்களால் வெங்காயத்தை வாங்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது. நாடு முழுக்க மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.100க்கு மேலே கூடியுள்ளது. சட்ட விரோதமாக வெங்காயத்தை அதிகம் சேமிப்பது, மழை வெள்ளம் போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை தடை செய்த பிறகும், வெங்காய விலை கூடியுள்ளது. எனவே, மத்திய அரசு, வெங்காய விலை உயர்வை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று சொல்ல வேண்டும். ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச தகுதியான விஷயம் இது. ஏனெனில், நாட்டில் தற்போது மிக முக்கியமான பிரச்சினை வெங்காய விலை உயர்வுதான். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
Comments