
தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - "ஓய்வு அரசியலில்" ஒய்யாரமாக இருக்கும் திரு. பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதை விடுத்து "தி.மு.க. என்றதும் பத்திரிகைகள் பாய்ந்து செய்தி வெளியிடுகின்றன" என்ற ஒரே காரணத்திற்காக உதவாக்கரை குற்றச்சாட்டுகளைக் கூற முன் வரக்கூடாது.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு தைரியம் இருந்தால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இன்றைக்கு தாறுமாறாக நிலைகுலைந்து நிற்கும் பொருளாதாரத்தை பற்றி பேசட்டும். பொருளாதாரச் சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பதில் சொல்லட்டும். "கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டை" "கதைக்கு உதவாத புகாரை" பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுகிறது என்பதற்காக திரு பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திரு. பொன். ராதாகிருஷ்ணனுக்கு நான் விடுக்கும் ஒரேயொரு அறைகூவல் இதுதான். ஊழல் அ.தி.மு.க.,வுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் 'பொய்களை உணமைகளாக்க' புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தேர்தலில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி - அரசியலிலும் ஓய்வு எடுங்கள்.
Comments