குருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம்.. கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SC asks Kerala to frame exclusive law for administration of Sabarimala temple டெல்லி: குருவாயூர் கோயிலுக்கு உள்ளதை போல் சபரிமலை கோயிலுக்கும் தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா அமர்வு அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலினுள் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள நாயர் அமைப்பு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாற்றி உத்தரவிட்டார். எனினும் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவு தொடர்வதாக அந்த அமர்வு அறிவித்தது. இதையடுத்து மண்டல பூஜையையொட்டி நடைத் திறப்பை அடுத்து ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களை போலீஸார் திருப்பி அனுப்புகின்றனர். 12 வயது குழந்தையாக இருந்தாலும் அவரை போலீஸார் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நீதிபதி ரமணா முன்பு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும். ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments