
சாணம் வீசிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று, மாநில அரசுக்கு, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில், கட்சி, நிர்வாகிகள் குறிப்பிட்ட இந்த திருவள்ளுவர் சிலைக்கு நேற்று பாலாபிஷேகம் செய்து சுத்தப்படுத்தினார். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு இன்று திடீரென வந்து தான் மறைத்து வைத்திருந்த ருத்ராட்ச மாலையை திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்தார். பிறகு காவி துண்டை சிலையின் தோள் பகுதியில் அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.
பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், அந்த பகுதியில் போலீசார் ஏற்கனவே, தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, மலர்மாலை அணிவிக்க மட்டும் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
ஆனால், அர்ஜுன் சம்பத் திருவள்ளுவருக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு அணிவித்து பூஜை நடத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்து கிளம்பிச் சென்ற அர்ஜுன் சம்பத்தை பின்தொடர்ந்தது காவல்துறை. இதனிடையே, வல்லம் பகுதி போலீசார் அர்ஜுன் சம்பத்தை கைது செய்துள்ளனர். போலீசாரின் தடையுத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போலீசார் அர்ஜுன் சம்பத்தை, அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, அர்ஜுன் சம்பத் அணிவித்த ருத்ராட்சம் மற்றும் காவி துண்டு ஆகியவற்றை போலீசார் அகற்றி விட்டனர்.
Comments