
உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதன்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை, மறைமுக தேர்தல் வழியாக நிரப்புவது குறித்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்ந்தெடுப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ல் நேரடியாக மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடந்தது.
இந்த சட்டம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்கின்றனர். பிரதமரை எம்.பி.,க்கள் தேர்வு செய்கின்றனர். அதுபோல் தற்போது, மேயரை, கவுன்சிலர்கள் தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சட்டத்திற்கு உட்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் தான், கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்தனர். 2006 ல் திமுகவும் மறைமுக தேர்தலை தானே நடத்தியது. தேர்தல் முறை மாறினாலும், உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது என்றார்.
கட்சிகள் கருத்து
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் அ.தி.மு.க. அரசு குழப்பம் செய்கிறது. : தி.மு.க.
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நேரடிதேர்தல் நடத்த வேண்டும்: முத்தரசன். இந்திய கம்யூனிஸ்ட்
ஜனநாயகத்தை அரசு வளைக்கப்பார்க்கிறது: கே.எஸ்.அழகிரி. காங்.
Comments