நாகை மாவட்டம் முழுவதும், ஒரு வாரமாக பகல் நேரங்களில், வெயில் வாட்டி வதைத்தது. இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு முதல் விடிய விடிய நாகை மாவட்டத்தில் கனமழை பெய்தது. சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில், பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. காலை 6 மணி நிலவரப்படி நாகையில் அதிகபட்சமாக 6 செ.மீ., மழை பதிவாகியது.
கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 26 கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 3 ஆயிரம் பைபர் படகுகள், 750 விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில், கிண்டி, ஆலந்தூர், மத்திய கைலாஷ், வட பழநி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், வேளச்சேரி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதியில் லேசான மழை பெய்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நேற்று இரவு மழை பெய்தது.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக வள மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அந்த காற்று தற்போது, தமிழக கடலோரத்தை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
Comments