மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பலத்தை நிரூபிக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே

Maharashtra: Floor test today, Sena alliance CM Uddhav to prove his majority மும்பை: மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. கடைசியில் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. நேற்று முதல்நாள் அங்கு பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார். இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபியின் ஜெயந்த் பாட்டில், சஹான் புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலாசாகிப் தோரட், நிதின் ராவத் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இன்று காலை சட்டசபை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.

அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்துவார். பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கோலம்ப்கருக்கு பதிலாக இவர் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 170 எம்எல்ஏக்கள் இருப்பதாக அந்த கூட்டணி தெரிவித்துள்ளது. 288 இடங்களில் 145 இடங்கள் இருந்தாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். ஆனால் சிவசேனா கூட்டணிக்கு அதைவிட அதிக இடங்கள் உள்ளது. இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு சாதாரணமாக நடந்து முடியும். எதுவும் பிரச்சனை ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதுவும் நடக்க கூடாது என்பதில் சிவசேனா கூட்டணி உறுதியாக உள்ளது. இதனால் சிவசேனா கூட்டணி எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அம்மாநில தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இன்று மட்டுமின்றி நாளையும் அவை நடக்க உள்ளது. இந்த நிலையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடந்து நாளையே நிரந்தர சபாநாயகர் தேர்வாகி, அவர் தன்னுடைய பெரும்பான்மையை அவையில் நிரூபிப்பார். அதன்பின் அவையில் புதிய அமைச்சர்கள் எல்லோரும் அறிமுகம் செய்யப்படுவார்கள். மேலும் நாளை அவையின் எதிர்கட்சி தலைவரும் தேர்வு செய்யப்படவுள்ளார்.

Comments