மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்

சோனியா, சரத் பவார் டெல்லி: கடந்த சனிக்கிழமை, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் பாஜக அரசு, அதிகாலை, பொறுப்பேற்றபோது, சோசியல் மீடியா முழுக்கவும், 'சாணக்கியர் அமித் ஷா' என்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் டிரென்டிங் ஆகிக்கொண்டு இருந்தன. சரியாக நான்கே நாளில், அந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஹேஷ்டேக் போட்டவர்கள் அப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. இன்று அது நடந்துவிட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.

எனவே, இது துக்ளக் தர்பார் என்று சோசியல் மீடியாக்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. எந்த மீடியா சாணக்கிய தந்திரம் என கூறியதோ அதே சோஷியல் மீடியாதான், இன்று இப்படி கூறுகிறது.

பாஜக இப்படி அவசரப்பட்டு ஆட்சியை பிடித்து விட்டு பிறகு ராஜினாமா செய்வது இது ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கனவே கர்நாடகாவில் எடியூரப்பா கடந்த வருடம் இரண்டு நாட்களில் தனது பதவியை இழக்க நேரிட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவரான சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆகிய இரு பெரும் மூத்த அரசியல் தலைவர்களின் அனுபவம், சரியான விகிதத்தில் கலவையாக வெளிப்பட்டு, அந்தந்த கட்சிகளின் இமேஜைக் காப்பாற்றி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியே வந்ததும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கதான் முனைப்பு காட்டியது. ஆனால் அவசரப்படவில்லை சரத்பவார். கூட்டணி தர்மத்தின்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் கருத்தை நான் அறிந்த பிறகுதான் எதுவும் பேச முடியும் என்று திட்டவட்டமாக உத்தவ் தாக்கரே விடம் தெரிவித்துவிட்டார் சரத்பவார். இதன் பிறகு இரண்டு முறை டெல்லிக்கு விரைந்து சென்று சோனியா காந்தியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போதுதான் தீட்டப்பட்டது மாஸ்டர் திட்டங்கள்.

இவ்வாறு கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போதே பாஜக தரப்பில் இருந்து ஏகப்பட்ட குற்றச்சாட்டு மழை பொழிய தொடங்கின. சோனியா காந்தி தலைமையிலான இந்த காங்கிரசை எதிர்த்து தான் நாம் பிரச்சாரம் செய்தோம். மக்கள் தீர்ப்பு அதற்குதான் கிடைத்தது. அப்படி இருக்கும்போது சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது எப்படி? என்று பாஜக தலைவர்கள், சிவசேனாவை நோக்கி, கண்டனக்குரல் எழுப்பினர். மற்றொரு பக்கம், காங்கிரசுக்கு தர்மசங்கடம். தீவிர இந்துத்துவ கட்சியாக அறியப்படும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிடும். தங்களின் அடிப்படைக் கொள்கைக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் அஞ்சியது. இதனால்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு கடும் இழுபறி நிலை நீடித்து வந்தது.

ஆனால் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தேவேந்திர பட்னாவிஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரவே, அவசரகதியில் அங்கு பாஜக ஆட்சி அமைந்தது. இதுதான் திருப்ப புள்ளி. இப்போது மொத்த ஃபோக்கசும் பாஜகவை நோக்கி மாறிவிட்டது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அஜித் பவாரை, சிறையில் தள்ளுவேன் என்று வீர வசனம் பேசியவர் தேவேந்திர பட்னாவிஸ். ஊழலை ஒழிப்பது தங்கள் கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று அறிவித்துள்ளது பாஜக. அப்படி இருக்கும்போது அஜித் பவாருடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்துள்ளத பாஜகவுக்கு சமூக வலைத்தளங்களில் கெட்ட பெயர்தான் கிடைத்தது.

பாஜக தனது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு உள்ளது, ஊழல் ஒழிப்பு என்பது வெற்று கோஷம்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாக இதை கவனிக்க முடிந்தது. தொடர்ச்சியாக பாஜகவின் பெயர் இவ்வாறு டேமேஜ் ஆன நிலையில் இன்று திடீரென அஜித் பவார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தங்களிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை என்று கூறி தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இப்போது காங்கிரஸ் ரூட் கிளியர். இனிமேல் சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் இவர்களை நோக்கி விமர்சனம் வைப்பவர்களுக்கு பதிலடியாக அஜித் பவார் உடன் பாஜக கூட்டணி வைத்துக் கொண்டதை சுட்டி காட்ட முடியும். அஜித் பவாரை துணை முதல்வராக்கிய போது, உங்கள் கொள்கை எங்கே போனது என்று காங்கிரஸ் தரப்பு கேட்க முடியும். அதிகாலையே அதிகார தாகத்தால்தானே ஆட்சிக்கு வந்தீர்கள் என விமர்சன கணைகளை வீச முடியும். மேலும், மகாராஷ்டிராவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை.. பாஜக அதிகார தாகத்துடன் நடந்துகொண்டது.. எனவே தாமதிக்க முடியாது.. பாஜகவை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதற்காக நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டோம் என்றும் காங்கிரஸ் கூறமுடியும்.

ஒருவகையில் இது சோனியா காந்தி மற்றும் சரத்பவார் ஆகிய இருவருக்கும் இராஜதந்திர ரீதியாக பெரிய வெற்றி. அஜித் பவார் என்ற ஒரு தனி மனிதரால் பாஜக பேசிவந்த தார்மீக அரசியலுக்கு வேட்டு வைத்தாகிவிட்டது. அப்படியே தங்கள் பக்கம் வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ஆயுதமும் உருவாக்கப்பட்டு விட்டது. காத்திருந்ததன் பலன் இது. சின்ன கோடு பக்கத்தில், ஒரு பெரிய கோடு போடப்படும் டெக்னிக்கும் இதுதான். தங்கள் அரசியல் அனுபவம் மொத்தத்தையும் களமிறக்கி வெற்றி பெற்றுள்ளனர், சோனியா காந்தியும், சரத் பவாரும்.

Comments