மகாராஷ்டிரா ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை.. உச்ச நீதிமன்ற படியேறிய சிவசேனா.. அதிரடி மனுதாக்கல்!

பேட்டி அளித்தார் மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவிற்கு ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மகாராஷ்டிரா அரசியல் உச்சபட்ச கொதிநிலையில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி தெரிவித்துவிட்டது. அதேபோல் ஆட்சி அமைக்க தேடி வந்த வாய்ப்பை சிவசேனா நழுவவிட்டுவிட்டது.

இந்த நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இன்று இரவு 8.30 மணிக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர் அழைத்துள்ளார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து அக்கட்சியின் இளம் எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறோம் என்றுதான் கூறினோம். எங்களுக்கு இரண்டு கட்சிகளின் ஆதரவு உள்ளது.

ஆனால் அவர்கள் சில விஷயங்களை முடிக்க நேரம் எடுக்கும். அதனால் நாங்கள் கூடுதல் அவகாசம் கேட்டோம். எங்களுக்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டது. 24 மணி நேரம் என்பது மிகவும் குறைவான நேரம். நாங்கள் நிலையான ஆட்சி அமைக்க விரும்புகிறோம், என்றார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆட்சி அமைப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆளுநரை சந்திப்பார். முக்கிய விஷயங்களை பேசுவார் என்கிறார்கள்.

இதற்கு மத்தியில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவிற்கு ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநரின் முடிவு சரியில்லை என்று கூறி, சிவசேனா வழக்கு தொடுத்துள்ளது. இதை அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட உள்ளது. சிவசேனா சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Comments