
அதேபோல் தமிழக அரசியலில் கடந்த இரண்டு வருடங்களில் நடந்த அதிரடி மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், தேர்தல்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது.
அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்க வேண்டும், என்றார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏன் இப்படி சொல்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றது போல ஒரு அதிசயம் இன்னும் சில மாதங்களில் நடக்கும். அதிசயமாக புதிய நபர் ஒருவர் முதல்வராக பதவி ஏற்பார். சில மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
தான் அரசியலுக்கு வருவதை உணர்த்தும் வகையில்தான் ரஜினிகாந்த் இப்படி கூறியதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது தான் முதல்வர் ஆவேன் என்று ரஜினிகாந்த் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவரின் அரசியல் வருகை விரைவில் நடக்கும் என்று ரஜினி இப்படி தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியை எல்லோரும் தப்பு கணக்கு போட்டனர். அவரை எல்லோரும் எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் முடியவில்லை. அதேபோல்தான் ரஜினியையும் சிலர் தப்பு கணக்கு போடுகிறார்கள் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுதான் ரஜினியின் அரசியல் வருகை குறித்து ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் பேட்டி அளித்தார். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். நல்லதை செய்வார்.ரஜினி மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
மக்களை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வருவார். ஆட்சிக்கு வந்தால் நன்றாக ஆட்சி செய்வார். அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ரஜினி அதிசயம் நடக்கும் என்று இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.
Comments