உள்ளாட்சித் தேர்தலுக்கு செக் வைக்கும் செ.கு.தமிழரசன்; காரணம் என்ன

தேர்தல் ஆணையம் சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்.

துணைத் தலைவர், துணை மேயர், ஆகிய பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை மையமாக வைத்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால், உள்ளாட்சித் தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போக கூடுமோ என விவாதம் உருவாகியுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துணை மேயர், துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரும் விவகாரத்தில் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை என்பது இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனின் வாதம்.

இந்நிலையில் செ.கு.தமிழரசன் மனுவில் குறிப்பிட்டுள்ள புகார் தொடர்பாக ஜனவரி 7-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்குக் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் ஒருவேளை மேலும் தள்ளிப்போக நேரிட்டால், மாநில தேர்தல் ஆணையம் மக்களின் கோபத்துக்கு ஆளாகக் கூடும் எனக் கூறப்படுகிறது. செ.கு.தமிழரசன் தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பில் என்ன பதில் அளிக்கப்போகிறது என்பது இப்போது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

துணைத் தலைவர் இட ஒதுக்கீடு விவகாரத்தை இத்தனை நாட்களாக விட்டுவிட்டு இப்போது ஏன் செ.கு.தமிழரசன் கையில் எடுக்க வேண்டும் என்பது குறித்து விசாரித்தால், அதற்கு பின்னணியில் பெரிய தலைகள் இருப்பதாக பதில் கிடைத்தது.

Comments