நீங்க ஆம்பளையா...ன்னு ஓபிஎஸ்-சை நோக்கி அன்புடன் கேட்ட துக்ளக் குருமூர்த்தி வீடியோ

சென்னை: "நீங்க ஆம்பளையா..."-ன்னு கேள்வி கேட்டு, நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த நிலையில், அப்போது முதல்வராக பொறுப்பேற்ற இப்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் சசிலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார்.

இதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த அவர், தன்னை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறி பரபரப்பை ஏற்படுதினார்.

அதன் பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டிய நிலையில் திடீரென ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததால் பெங்களூரு சிறைக்கு செல்ல நேர்ந்தது.

இதன் காரணமாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்து அவரை முதல்வராக பதவி ஏற்க வைத்துவிட்டு அன்றே சிறைக்கு சென்றார். அதன்பிறகு சில மாதங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதேநேரம் பிரிந்து கிடந்த அதிமுக ஒன்று சேர்ந்தது. ஒ பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். அதிமுக என்ற கட்சி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். சசிகலாவை முதல்வராக பதவி ஏற்பு செய்ய விழா ஏற்பாடுகள் நடைபெற்ற போது என்னிடம் வந்த ஓபிஎஸ்-சை நோக்கி, "நீங்க ஆம்பளையா..."-ன்னு கேட்டேன். பிறகு அந்த சமாதியில் போய் உட்காருங்க வழி கிடைக்கும் என சொன்னேன் என குருமூர்த்தி அவர்கள் பேசியுள்ளார்.

ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை தானே ஒருங்கிணைத்தேன் என்றும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments