
மதுரை வடக்கு தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த இரண்டு நாட்களாக கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் கோரிக்கை மனுக்கள் பெறுகின்றனர்.
இந்நிலையில் மதுரையில், தன்னிடம் மனு அளிக்க வந்தவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீர்களே, பாவமா இருக்கு என செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்லூர் ராஜூ உடல் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், ஓய்வு கூட எடுக்காமல் அந்த நிலையிலேயே மனுக்களை வாங்க வந்ததால் அவரது முகத்தில் அயர்வு தெரிந்தது.
ஒரு கட்டத்தில் கூட்டம் முண்டியடித்து ஏறியதால், கோபமான அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களை தள்ளி நிற்கும்படி கூறினார். இதனிடையே அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Comments