
அதேநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கட்சிகள் முன்வந்தால் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல் கட்டமாக குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் 3 கட்சிகளும் இணைந்து அரசு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதற்காக இக்கட்சிகளின் குழுக்கள் கலந்து ஆலோசனை நடத்தி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின.
இதனையடுத்து 2-வது கட்டமாக அமைச்சர் பதவிகளை பகிர்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 3 கட்சிகளுக்குமே தலா 14 அமைச்சர்கள் பதவி என்கிற பார்முலா முன்வைக்கப்பட்டது. இதில் சிவசேனா தங்களுக்கு கூடுதலாக 2 அமைச்சர் பதவியை கேட்டது. இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் இறுதி முடிவு வெளியாகவில்லை.
3-வது கட்டமாக முதல்வர் பதவி எந்த கட்சிக்கு என்கிற விவாதம் நடந்தது. சிவசேனா-என்சிபி இடையே சுழற்சி முறையில் முதல்வர் பதவி, காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. தற்போது சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்பதற்காகவே பாஜக கூட்டணியை உதறியது அக்கட்சி. அதனது சுயமரியாதையை மதிக்கும் வகையில் இம்முடிவெடுக்கப்பட்டது என்கிறார் என்சிபியின் மூத்த தலைவர் நவாப் மாலிக்.
இறுதி கட்டமாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க இம்மூன்று கட்சிகளும் முடிவெடுத்துள்ளது. ஆளுநர் கோஷ்யாரியை இன்று மூன்று கட்சித் தலைவர்களும் இணைந்து சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
விவசாயிகள் பிரச்சனை குறித்து சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூறப்பட்டாலும் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் சில வாரங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எங்கள் அரசு 5 ஆண்டுகாலம் முழுமையாக செயல்படும் என்றார்.
Comments