நடுநிசியில் எழுப்பி மேக்கப் போட்டு நித்தியுடன் வீடியோவில் நடிக்க வைப்பர்.. அம்பலப்படுத்திய சிறுமி

மறுப்பு அகமதாபாத்: நள்ளிரவில் என்னை எழுப்பி அதிகமான நகைகளை அணிவித்து மேக்கப் போட்டுவிட்டு நித்தியானந்தாவுடன் விளம்பரங்களில் நடிக்க வைப்பார்கள் என மீட்கப்பட்ட பெங்களூர் சிறுமி பரபரப்பு புகார் அளித்துள்ளார். பெங்களூரில் ஆசிரமம் எடுத்து நடத்தி வரும் நித்தியானந்தா தான் தியானத்தில் இருந்த நிலையில் சூரியன் உதயமாகாமல் இருக்க வைத்ததாக கூறி பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அப்போது நித்தியின் சீடர்கள் பிரன்பிரியா மற்றும் பிரியத்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. மீட்கப்பட்ட 4 பேரில் இரு குழந்தைகள் புகார்தாரான பெங்களூர் ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். இதையடுத்து இருவரும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்த கொடுமைகள் குறித்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் கடந்த 2013-ஆம் ஆண்டு நித்தியானந்தா ஆசிரமத்தின் குருகுலத்தில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நாங்கள் நடித்தோம்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறைகேடு நடந்து வருகிறது. ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் எங்களை நள்ளிரவில் தூக்கத்தில் எழுப்புவர். அதிக நகைகளுடன் மேக்கப் போட வைப்பார்கள். நாங்கள் நித்தியானந்தாவுடன் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிக்கும். குழந்தைகளிடம் அவர்களின் அம்மா, அப்பாவை தவறாக பேச வைப்பர். அதற்கு நான் மறுத்தேன் என தெரிவித்தார்.

Comments