
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதிலிருந்து ரஜினியுடன் சேர்ந்து பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அது போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனக்கு ஆதரவு தருமாறு ரஜினியை நேரில் சந்தித்து கேட்டார்.
இந்த நிலையில் கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டு நிறைவையொட்டி ஒரு விழா சென்னையில் எடுக்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில் கமலும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் ரசிகர்களை ஏமாற்றிவிடாதீர் என ரஜினிக்கு அறிவுரை வழங்கினார். ரஜினி ஆன்மிக அரசியலை பின்பற்றுவதாக அறிவித்துள்ளார். அது போல் கமலோ பகுத்தறிவு அரசியலை பின்பற்றுகிறார். மாற்று சித்தாந்தங்களை கொண்டிருக்கும் இருவரும் இணைவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் கமலின் திரையுலகம், கலையுலக சாதனைகளை பாராட்டி ஒடிஸாவில் சென்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விருதை முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார்.
இந்த விழாவை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் எஸ் ஏ சந்திரசேகர் கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் கூறுகையில் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நானும் ரஜினியும் இணைய அவசியமேற்பட்டால் இணைவோம்.
ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. நல்ல தலைவராக இருக்கக் கூடிய கோத்தபய நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என்றார் கமல்.
Comments