மகாராஷ்டிரா: நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு என்சிபி, சுயேட்சைகள் உட்பட 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் 2 நாட்களாக விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததாலேயே ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸுக்கு 14 நாட்கள், ஆளுநர் அவகாசம் கொடுத்திருக்கிறார் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.

ஆனால் என்சிபியின் 54 எம்.எல்.ஏக்கள், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரவில்லை என அபிஷேசிங் சிங்வி வாதத்தை முன்வைத்தார். மேலும் சட்டசபையில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கபில் சிபல் வாதிட்டார்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் அனைத்தும் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் அளித்த தீர்ப்பில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்; மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Comments