
கவர்னர் கெடு
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில், பா.ஜ., சிவசேனா இடயே இழுபறி ஏற்பட்டது. சிவசேனா நிபந்தனைகள் காரணமாக, ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த பா.ஜ., தலைவர்கள் 'ஆட்சி அமைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை ' என தெரிவித்தனர். தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று(நவ.,11) மாலைக்குள் ஆதரவு கடிதம் கொடுக்கும்படி சிவசேனா தலைவர்களுக்கு கவர்னர் கெடு விதித்தார்.
அவகாசம் அளிக்க மறுப்பு
தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது. மேலும், உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தொடர்ந்து சிவசேனா கட்சியினர் , ஆட்சி அமைக்க கால அவகாசம் கோரினர். ஆனால், அதற்கு கவர்னர் மறுத்துவிட்டார். தொடர்ந்து தேசியவாத காங்கிரசுக்கும் ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், அக்கட்சி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
பரிந்துரை
மஹாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.
ஒப்புதல்
இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
Comments