
'விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எந்த முகாந்திரமும் இல்லை' என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
விமானப்படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு, பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
முன்னாள் மத்திய அமைச்சர்களான, பா.ஜ., அதிருப்தியாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த, உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு, டிச., 14ல் தீர்ப்பு அளித்தது. 'இந்த ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை' என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, யஷ்வந்த சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு விசாரித்து. இந்தாண்டு, மே, 10ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்ப்டடது; இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுப்பு தெரிவித்தனர்.
இதன் மூலம், ரபேல் விமான கொள்முதலில், தவறு ஏதும் நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Comments