மும்பை : நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜையையொட்டி நடைத்திறக்கும் போது நிச்சயம் சபரிமலைக்கு செல்வேன் என பெண்கள் ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதினரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அளித்தது.
இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு ஏராளமான பெண்கள் செல்வதாக அறிவித்தனர். ஆனால் அவர்களை பக்தர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் போலீஸார் துணையுடன் பிந்து, கனகதுர்கா ஆகிய பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெண்களின் வருகை அதிகரித்ததால் பத்தினம்திட்டாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள நாயர் அமைப்பினர் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்.
இதன் மீதான தீர்ப்பு இன்று வந்தது. அப்போது மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதுவரை சபரிமலை கோயிலுக்கு பெண்கள் அனுமதி என்ற உத்தரவு தொடரும் என கூறியுள்ளது.
இதுகுறித்து புனேவை சேர்ந்த பெண்கள் அமைப்பின் ஆர்வலர் திருப்தி தேசாய் கூறுகையில் உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதி உண்டு. அதற்கு எதிராக யாரும் போராட முடியாது.
எந்த வித பாகுபாடும் இல்லை என்று சொல்வோர் பொய் கூறுகின்றனர். ஏனெனில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோர்ட் உத்தரவு தொடரும் நிலையில் நான் நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளேன் என்றார். கடந்த ஆண்டே சபரிமலைக்கு வந்த இவர் கடும் எதிர்ப்புகளால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
Comments