பிரசவத்துக்கு போன கர்ப்பிணி.. உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்.. முற்றுகை.. பரபரப்பு

nurse leaves syringe inside pregnant womans body ராமநாதபுரம்: நம்பி பிரசவத்துக்கு போன கர்ப்பிணி ரம்யாவின் வயிற்றில்.. கவனக்குறைவாக உடைந்த ஊசியை வைத்து தைத்த நர்ஸ்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா.. 21 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆன நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரம்யா கர்ப்பமானார்.

அதனால், பக்கத்தில் உள்ள உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற ரம்யா, தனது பிரசவத்திற்காக பதிவு செய்து கொண்டு, அதன்படி அங்கு சிகிச்சை வந்திருக்கிறார். போன 19ம் தேதி பிரசவத்துக்கு தேதி குறித்து தந்தனர் டாக்டர்கள். அதன்படி, அன்றைய தினமே ரம்யா அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லை என்பதால் நர்ஸ்கள்தான் பிரசவம் பார்த்துள்ளனர்.. ரம்யாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி, அதன்படி சிசேரியனும் செய்யப்பட்டது. அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆபரேஷன் முடிந்து 2 நாள் ஆகியும் ரம்யாவுக்கு ரத்த போக்கு நிற்கவே இல்லை.

இதனால் ரத்த போக்கு எதனால் ஏற்படுகிறது என்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது, உடைந்த ஊசி ஒன்று ரம்யாவின் அடி வயிற்று எலும்பின் மேலே இருப்பது தெரிந்தது. ஆனால், அந்த ஊசியை அகற்ற, எலும்பு சார்ந்த டாக்டர்கள் அங்கு இல்லை என்பதால், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சொன்னார்கள். அதனால் பதறிபோன உறவினர்களும், ராமநாதரபுத்தில் அனுமதித்தனர்.. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனர். இப்போது, ரம்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. கவனக்குறைவாக கர்ப்பிணி வயிற்றில் ஊசியை வைத்து தைத்து.. அலட்சியமாகவும் நடந்து கொண்ட நர்ஸ்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரியும், ரம்யாவின் உறவினர்கள், பொதுமக்கள் உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் இதை பற்றி சொல்லும்போது, "பிரசவத்தின்போது பெண்களுக்கு தையல் போடுவது வழக்கம். ரம்யாவுக்கு அப்படி போடும்போது தையல் ஊசியில் பாதி உடைந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் இதில் தவறு நடந்திருப்பது தெரிய வந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Comments