உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் உள்ளனர்.
இந்த 5 பேரும் விசாரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் வழக்கை நீதிபதிகளே விசாரித்தனர்.
சுமார் 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார்.
அதில் அந்த இடத்தை பராமரித்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நிலத்தை நிர்மோஹி அகாரா அமைப்பு உரிமை கோர முடியாது என கூறி அந்த அமைப்பின் மனுவை நிராகரித்துவிட்டார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை நிர்மோஹி அகாராவுக்கு வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில் தற்போது அந்த அமைப்பின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments