
மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி டிஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தவ் தாக்கரேவிடமும் நேரடியாக சில கோரிக்கைகளை வைத்தார். அதில், உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் பல லட்சம் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மும்பை தமிழர்களின் பாதுகாப்பு & நலனுக்காக உத்தவ் பணியாற்ற வேண்டும். மும்பையில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள்.
அவர் தன்னுடைய பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். மாநில சுயாட்சி மீது சிவசேனா கவனம் செலுத்து என நம்புகிறேன். மற்ற மாநிலங்களுடன் சிவசேனா ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்.
எதிர்கட்சிகளை இணைத்து சரத் பவார் சாதனை படைத்துள்ளார். அவர் நமக்கெல்லாம் புதிய பாதையை போட்டு கொடுத்துள்ளார். சரத் பவாரின் பாதையை எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க பின்பற்ற வேண்டும்.
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதேபோல் இணைய வேண்டும். பாஜகவை எல்லோரும் சேர்த்து எதிர்த்தால் எளிதாக வெல்ல முடியும். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை மொத்த இந்திய அரசியலும் பின்பற்ற வேண்டும், என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments