
பொதுவாக அரசு விழா அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி மேடைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது படங்களும் இடம்பெறும். ஆனால் சமீபகாலமாக அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். பெரும்பாலும் ஓ.பி.எஸ். படத்தை போடாமலே அரசு விழாக்கள் நடக்கிறதாம்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடலூரில் நடந்த ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா, கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா மேடைகளில் துணை முதல்வர் படம் இடம்பெறவில்லையாம். இத்தனைக்கும் அவர் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மிகுந்த எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தினாலும் கூட, அவர் இதுவரை அதனை வெளிக்காட்டாமல் பொறுமைக் காக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதனிடையே இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசிய போது, இந்த விஷயத்தில் அதிகாரிகள் பாவமுங்க, அவங்க என்ன செய்ய முடியும், எல்லாம் மேலிடத்து வாய் மொழி உத்தரவாக இருக்கலாம் அல்லவா எனக் கூறினார்.
Comments