
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது, உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடும் என தினகரன் கூறியதோடு சரி, அதற்கு பிறகு அது தொடர்பாக எதுவும் பேசவில்லை.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விண்ணப்ப படிவங்கள் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், அமமுக பொதுச்செயலாளர் விண்ணப்பபடிவம் உள்ளிட்ட எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காப்பது அக்கட்சியின் தொண்டர்களை புலம்ப வைத்துள்ளதோடு சோர்வையும் அளித்துள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் பொதுச்சின்னம் வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட சின்னங்கள் தொடர்பான அறிவிப்பை வைத்து பார்த்தால் அமமுக பொதுச்சின்னம் பெறும் தகுதியை கூட பெறவில்லை.
இதனிடையே டிடிவி தினகரன் அறிவிப்பதற்கு முன்பே, மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களை சந்தித்து பேசி ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார்களாம். தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியானவுடன் அதனை சென்னைக்கு அனுப்ப தயாராக இருக்கிறார்கள்.
Comments