
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராகி வருகிறது.. கடந்த பல வருடங்களாகவே வார்டு கவுன்சிலர், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த முறை அதை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வார்டு உறுப்பினர்கள் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது கவுன்சிலர்களை வைத்து இவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதுதொடர்பான முடிவு இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவசரச் சட்டத்தை கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா, பாஜக, போன்ற கட்சிகள் முக்கியமான, மற்றும் அதிகமான மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை கேட்டு வருகின்றன. இதனால் அதிமுக தலைமை திணறி வருகிறது. இந்த நிலையில்தான் மறைமுக தேர்தல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமுக தேர்தல் நடைபெற்றால், எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்த கட்சியைச் சார்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவராக முடியும்.. அந்த வகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மிகுந்த எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
மறைமுக தேர்தல் நடத்த அதிமுகவில் ஒரு பேச்சு எழும்போதே, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அதிமுக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதையும் மீறி அதிமுக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமேயானால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
ஒருவேளை மறைமுக தேர்தல் என்பது உண்மை தகவலாக இருப்பின், இதனை மற்ற கட்சிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பது புரியவில்லை!
Comments