
மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இவர்ளை வாக்களித்து தேர்வு செய்வார்கள். இதுதான் மறைமுக தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இத்தனை மேயர் இடங்கள் வேண்டும் என்று அதிமுகவிடம் கூட்டணி கட்சிகள் கேட்க முடியாது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுகவிடம் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேயர் சீட்களை கேட்டு வருகிறது. ஆனால் அதிமுக இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.
இவர்களுக்காகத்தான் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி கவுன்சிலர்கள்தான் மேயர்களை தேர்வு செய்வார்கள். அதனால் மாநகராட்சியில் எந்த கட்சி அதிக கவுன்சிலர்களை வெல்கிறதோ அவர்கள்தான் மேயர் பதவியை பெற முடியும்.
இதனால் தேர்தலுக்கு பின் கவுன்சிலர் பலத்தை வைத்துதான் தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் மேயர் பதவிக்கு பேச முடியும். தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சிகள் அதிமுகவை நெருக்க முடியாது. ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை கவுன்சிலர் அதிமுக எனில், அங்கு மேயர் பதவியை அதிமுக வேறு யாருக்கும் பெரும்பாலும் தாராது.
இதனால்தான் அதிமுக மறைமுக தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசியல் ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். அதே சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இதனால் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் இதை பாஜக தற்போது வெளிப்படையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
செய்தி சேனல் ஒன்றில் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கூட்டணி கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சி மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை தவிர்த்து, மறைமுக தேர்தலை கொண்டு வருகிறது என்று விமர்சனம் செய்தார்.
பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் இந்த முடிவை எதிர்த்து இருக்கிறார்கள். அதேபோல் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளும் அரசின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Comments