மன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா?

மன்னார்குடி திவாகரன் திருவாரூர்: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மன்னார்குடி உறவுகள் ஒன்றிணையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சசிகலா தனது தம்பி திவாகரன் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில், ஜெய் ஆனந்துக்காக அந்த வருத்தத்தை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு திருமணத்தில் கலந்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாராம். இதனிடையே தம்பி திவாகரனையும், அக்கா மகன் தினகரனையும் சமாதானம் பேசி மீண்டும் அவர் இணைத்து வைப்பாரா என்றக் கேள்வி எழுந்துள்ளது.

மன்னார்குடியில் வசித்து வரும் சசிகலாவின் தம்பி திவாகரன், தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருமணம் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கா சசிகலா அதற்குள் விடுதலையாகிவிடுவார் என்று நம்பிக்கை பொங்க தனது சுற்றத்தாரிடம் கூறி வருகிறாராம் அவர்.

ஒருவேளை தனது அக்கா சசிகலா விடுதலையாகாவிட்டால், பரோலிலாவது அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் மகனுக்கு திருமணத்தை நடத்த ஆசைப்படுகிறார் திவாகரன். இதனிடையே தம்பி திவாகரன் மீது மிகுந்த மனக்கசப்புடன் இருக்கும் சசிகலா, தான் பார்த்து வளர்ந்த பிள்ளை ஜெய் ஆனந்துக்காக திருமணத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

இதனிடையே திவாகரனும், தினகரனும் எலியும் பூனையுமாக மாறி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் இந்த திருமண நிகழ்வு மூலம் சசிகலா சமாதானம் செய்து வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், மகன் திருமணத்துக்கான அழைப்பிதழை திவாகரன் தினகரனுக்கு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திவாகரனை பொறுத்தவரை அவருக்கு ஒரே மகன் என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என விரும்புகிறாராம். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி பிரமாண்ட முறையில் அவர்களுக்கு விருந்தளித்து அசத்த உள்ளாராம்.

Comments