
அயோத்தியைப் போலவே சபரிமலை பிரச்சனையில் பாஜக முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து பாஜக பல்வேறு போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. சபரிமலை கடந்த ஆண்டு ஐயப்ப சாமி சீசனில் கடும் போராட்ட களமாக இருந்தது.
சபரிமலை கோவிலில் சிவன் மற்றும் மோகினி (விஷ்ணுவின் அவதாரம்) ஆகியோரின் மகனாகக் கருதப்படும் அய்யப்பன் சுவாமி உள்ளார். அய்யப்பன் சுவாமியின் பிரம்மச்சாரியம் காரணமாக மாதவிடாய் நின்ற பெண்களை கோவிலின் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்பது பல ஆண்டுகளாக நம்பிக்கை ஆகும்.
இந்த நம்பிக்கைக்கு 1991 ல் கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைவதைத் தடைசெய்ததால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வழக்கறிஞர்கள், பெண்களுக்கு சபரிமலையில் விதித்த தடையை எதிர்த்து 2006 இல் வழக்குத் தாக்கல் செய்தனர். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளையும் சாரத்தையும் மீறுவதாக தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இதையடுதது உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2018 இல், 1991 உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்ப்பை மாற்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதி அளித்தது.
இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக, பெண்களை நுழைய விடாமல் சபரிமலையில் பல்வேறு போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்னும் சில நாட்களில் தீர்ப்பு அளிக்க உள்ளது. சபரிமலை சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Comments