பதவியேற்புக்கு மட்டும் அவசரம்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசமா?.. பாஜகவுக்கு கபில் சிபல் நறுக்

வீடியோ டெல்லி: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க மட்டும் அவசரம் காட்டிய தேவேந்திர பட்னவீஸ், பெரும்பான்மையை நிரூபிக்க மட்டும் ஏன் காலஅவகாசம் கேட்கிறார் என சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பினார். மகாராஷ்டிராவில் பாஜக- என்சிபி அஜித் பவார் பிரிவு இணைந்து ஆட்சி அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்றும் விசாரணையை தொடங்கியுள்ளது. அப்போது, பட்னவீஸ் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிவசேனா சார்பில் கபில் சிபலும், என்சிபி- காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும், மகாராஷ்டிரா அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவும், பாஜக சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.

அப்போது சிவசேனா சார்பில் ஆஜரான கபில் சிபல் வாதத்தை தொடங்கினார். அவர் முன் வைத்த வாதத்தில் தேர்தலுக்கு முன் பாஜக- சிவசேனா கூட்டணியில் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் அக்கூட்டணியிலிருந்து சேனா விலகியது. தற்போது சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக 154 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் என்னிடம் உள்ளது.

ஜனாதிபதி ஆட்சி அவசர அவசரமாக நவம்பர் 23-ஆம் தேதி அதிகாலை 5.17 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக பதவியேற்றார். இத்தனை அவசர அவசரமாக ஜனாதிபதி ஆட்சி நீக்குவதற்கு இது என்ன அவசரநிலை பிரகடனமா. அப்படியென்றால் ஜனாதிபதி ஆட்சி நீக்கப்பட்ட அதிகாலை 5.17 மணிக்குள் அனைத்து விஷயங்களும் நடந்து முடிந்துவிட்டது, அப்படித்தானே!

நவம்பர் 22-ஆம் தேதியே உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இரவு 7 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.17 மணி வரை ஜனாதிபதி ஆட்சி நீக்கம் உள்ளிட்டவை ஏன் நடைபெற வேண்டும். ஆளுநரால் ஒரு 24 மணி நேரம் பொறுத்திருக்க முடியாதா.

அவசர அவசரமாக பதவியேற்ற பட்னவீஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மட்டும் அவகாசம் கோருவது ஏன். அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. தங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றால் உடனே நிரூபிக்க வேண்டியதுதானே. எதற்கு அவகாசம் கேட்கிறார்கள்? எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

சட்டசபையின் மூத்த உறுப்பினர் இதை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை ஒற்றை வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும். அங்கு நடைபெறும் வாக்கெடுப்பை வீடியோவாக எடுக்க வேண்டும் என்றார்.

Comments