இலங்கை 8-வது அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது

Voting begins in Srilanka Presidential Elections கொழும்பு: இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் வன்முறைகள் எதுவும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 சர்வதேச பார்வையாளர்கள் இத்தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கியது.

இத்தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இலங்கை வரலாற்றில் மிக அதிக அளவிலான வேட்பாளர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் மிக நீளமான வாக்குச் சீட்டு இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. கருணா. வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சிலர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். 12,845 வாக்குச் சாவடிகளில் சுமார் 1.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 9.50 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.

இந்த தேர்தலில் இதுவரை மிக குறைவான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதேநேரத்தில் ஊடகங்கள் அதிகமாக தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

Comments