
கடந்த சனிக்கிழமை அன்று (நவ.2) டெல்லியில் உள்ள திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் சென்றது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இந்த வன்முறையில் டெல்லி வடக்கு இணை காவல்ஆணையர், 2 காவல் நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 போலீஸ்கார்கள் காயம் அடைந்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வழக்கறிஞர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.
பிற்பகல் 2 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 12 மோட்டார் சைக்கிள்கள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்கள் அமரும் இருக்கைகள், வழக்கறிஞர்கள் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபிடித்து எரிந்தது.
போலீசுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த இந்த கலவரம் டெல்லி மாநகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த கலவரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்பி கார்க் தலைமையில் விசாரணை குழு அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை ஏற்று உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பார்கவுன்சிலுக்கு நோட்டீசும் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று போலீசாரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றம் நோக்கி ஊர்வலம் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். காக்கி சட்டை அணியாமல், சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள்.
ஆனால் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து போலீசார் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்து போய் உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே போலீசாரின் குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Comments