54 எம்எல்ஏக்களில் பாஜகவுடன் இருப்பது அஜித் பவார் மட்டுமே.. மிஸ்ஸான 4 பேரையும் பிடிச்சு போட்டாச்சாம்!

குர்கானில் மும்பை: பாஜகவுடன் இருக்கும் ஒரே ஒரு என்சிபி எம்எல்ஏ அஜித் பவார் மட்டுமே. ஏனைய 53 எம்எல்ஏக்களும் சரத்பவாருடன் உள்ளனர் என கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் சரத்பவாருக்கு துரோகம் இழைத்து ஆதரவு கடிதத்தை தந்திரமாக பெற்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு வரும் 30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அவசர அவசரமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக ஆளுநருக்கு எதிராக சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் மீதான விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது.

இந்த வழக்கின் முக்கிய நோக்கமே புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசு விரைந்து ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோருவதுதான். கால அவகாசத்தால் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்பதே சிவசேனா- காங்கிரஸ்- என்சிபிக்களின் வாதம் ஆகும்.


இதுகுறித்து என்சிபி தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் 4 என்சிபி எம்எல்ஏக்களான அனில் பாட்டீல், பாபா சாஹிப் பாட்டீல், தவுலத் தரோடா மறஅறும் நர்ஹாரி ஜிர்வார் ஆகியோர் குர்கானில் நேற்று பாஜகவின் பிடியில் இருந்தனர்.

இவர்களை 4 பேரையும் மீட்டு விட்டோம். அவர்களும் என்சிபிக்கு ஆதரவாக இருப்பதாகே கூறியுள்ளனர். அது போல் மற்றொரு எம்எல்ஏவான அன்னா பன்சோடு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரது குடும்பத்தினர் அவர் புனேவில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

மும்பையில் உள்ள என்சிபி எம்எல்ஏக்களுடன் தான் விரைவில் வந்து சேர்ந்து விடுவதாக பன்சோடு கூறியதாக குடும்பத்தினர் கூறினர். எனவே பாஜகவுடன் இருக்கும் என்சிபி எம்எல்ஏ என பார்த்தால் அது அஜித் பவார் மட்டுமே. வெற்றி பெற்ற 54 எம்எல்ஏக்களில் 53 பேர் சரத்பவாருடன் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Comments