உத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்!

Maharashtra Assembly floor test: Nobody voted against the motion மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு, இன்று சட்டசபையில் கோரிய, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு ஓட்டுக்களும் எதிர்த்து பதிவாகவில்லை. அதேநேரம் 4 ஓட்டுக்கள் நடுநிலை என்று பதிவு செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது. முதல்வராக சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார்.

இதையடுத்து சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தற்காலிக சபாநாயகராக திலீப் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்த, பாஜகவை சேர்ந்த தற்காலிக சபாநாயகரை, நீக்கிவிட்டு அமைச்சரவை இதுபோன்ற முடிவை எடுத்தது. இதைக்கண்டித்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ,பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா சட்டசபை பலம், 288, அதில், பாஜக எம்எல்ஏக்கள் 105 பேர் உள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி, 169 உறுப்பினர்கள் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசு அமோக வெற்றி பெற்றது. பாஜக வெளிநடப்பு செய்திருந்ததால் எதிர்த்து யாருமே வாக்களிக்கவில்லை.

அதேநேரம் 4 வாக்குகள் நடுநிலை என்று பதிவு செய்யப்பட்டன. அதாவது, உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவும் கிடையாது எதிர்ப்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அந்த நான்கு எம்எல்ஏக்களும் எடுத்தனர் 2 அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) எம்.எல்.ஏ.க்கள், ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மற்றும் ஒரு மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி எம்எல்ஏ ஆகியோர் நடுநிலை வகித்தனர்.

Comments