பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 3 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு.. நாளை விசாரணை

maharashtra govt: sena, ncp congress case filed in supreme court, over maharashtra coup sources டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை அவசரமாக அணுகிய நிலையில், நாளையே அந்த மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அதிகாலை திடீரென வாபஸ் பெறப்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக, இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் அளித்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசில அதிருப்தி எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு அளித்து உள்ளார்களே தவிர, சுமார் 50 எம்எல்ஏக்கள் சரத்பவாருக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள் என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இன்று மும்பையில் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று இரவோடு இரவாக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவிக்கு வந்துள்ள போப்டே, திருப்பதி, சென்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரை சந்தித்து அவசர வழக்காக இதை ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மூன்று கட்சி வழக்கறிஞர்களும் கோரிக்கை வைத்தனர். இரவு சுமார் 8.30 மணிக்கு வெளியான தகவல்படி, இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டது. பிறகு 1 மணி நேரத்திற்குள்ளாக வெளியான மற்றொரு தகவலில், நாளையே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை போல, இங்கும் உத்தரவிட வேண்டும் என்பதுதான், 3 கட்சிகளின் கோரிக்கையாகும்.

Comments