ஆஹா.. உருவாகுது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்று சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கி கடந்த இரண்டு தினங்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை,. புதுக்கோட்டை, தஞ்சாபூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர். புதுச்சேரி, நாகப்பட்டினம் என பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தார். சூறாவளி காற்று வீசுவதால் இலங்கையின் தெற்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

Comments