
2 நாளைக்கு முன்பு சென்னை வந்த பாத்திமாவின் அப்பா அப்துல் லத்தீப், தமிழக முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து, முறைப்படி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இப்போது, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில்தான் இவர் தங்கி உள்ளார். இதனிடையே, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலீனா ஆகியோர் அப்துல் லத்தீப்பிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அப்துல் லத்தீப் சொல்லும்போது, "பாத்திமாவின் கடைசி 28 நாள் டைரி குறிப்புகள், ஹாஸ்டலில் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் எங்களிடம் போனில் பேசிய ஆடியோ பதிவு.. இதை எல்லாம் அதிகாரிகளிடம் தந்துள்ளேன்.. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஃபாத்திமாவின் அப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர்களை நேரில் அழைத்து மீண்டும் விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, 3 பேராசிரியர்களுக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் பாத்திமா மரண விசாரணை பெரும் பரபரப்பை எட்டி உள்ளது.
ஏற்கனவே, மாணவி இறந்தும் இத்தனை நாள் ஆகியும், ஏன் குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனம் பத்மநாபனை உடனே கைது செய்யவில்லை, விசாரணைகூட நடத்தவில்லை என்று கேரள மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அதன் பாதிப்பு தமிழக மாணவர்களிடமும் தென்பட தொடங்கியது.. இந்நிலையில். சுதர்சன பத்மநாபன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது விசாரணையின் துரிதத்தையும், தீவிரத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
Comments