3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி

Chennai IIT Student Death: nine died in the iit campus sofar சென்னை: சென்னை ஐஐடியா.. அய்யோ வேண்டாம்.. என்று மாணவர்கள் எதிர்காலத்தில் அச்சப்படும் நிலை வந்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. காரணம் இங்கு கடந்த 2016 முதல் இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
3 ஆண்டுகளில் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டும் கூட இது தொடர் கதையாக நீடித்து வருவதுதான் வேதனை. இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதே தெரியவில்லை.

சென்னை ஐஐடியில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. ஆனால் 2016 முதல் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் 9 பேர் இறந்துள்ளனர்.

இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2 பேர். மலப்புரத்தைச் சேர்ந்த ஷாகுல் கோர்நாத் என்ற மாணவர் 2018ம் ஆண்டு ஐஐடியில் தற்கொலை செய்து கொ ண்டார். ஷாகுல் அட்டென்டென்ஸ் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

2019ம் ஆண்டு மட்டும் சென்னை ஐஐடியில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்டெக் மாணவர் கோபால் பாபு என்பவர் தற்கொலை செய்தார். மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறியிருந்தனர்.

அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தார்.

ரஞ்சனா குமாரி மரணத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் ஹராஸ்மென்ட் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

இதேபோல 2018ம் ஆண்டு டிசம்பர் மதாம் அதிதி சிம்ஹா என்ற உதவிப் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இவர் இயற்பியல் துறையைச் சேர்ந்தவர்.

இதுதவிர ஒரு ஆய்வு மாணவர், 2 பட்டதாரி மாணவர்கள், ஒரு ஊழியரின் மனைவி ஆகியோரும் சென்னை ஐஐடியில் 2016ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைகளுக்கு வெவ்வேறு காரணம் இருந்தாலும் கூட அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் என்பதுதான் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.இனியாவது உயிர்கள் பறி போகும் சூழல் தவிர்க்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Comments