2 கடிதங்களும் எங்கே? கொண்டு வாங்க.. மகாராஷ்டிரா வழக்கில் நாளை நடக்க போகும் சம்பவங்கள்!

நாளை வழக்கு டெல்லி: மகாராஷ்டிரா வழக்கில் நாளை முக்கியமான திருப்பங்கள் நடக்கும், அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவிற்கு நவம்பர் 30ம் தேதி ஆளுநர் பகத் சிங் நேரம் கொடுத்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் வழக்கு தொடுத்தது. அதில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் விளக்கம் அளிக்க வேண்டும், நாளை காலை இரண்டு கடிதங்களை இது தொடர்பாக அளிக்க வேண்டும் என்று இன்று நடந்த அவசர வழக்கு விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இந்த வழக்கில் நாளை பின் வரும் விஷயங்கள் நடக்க போகிறது, நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி கவர்னர் எடுத்த முடிவு சரியா என்று உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கும். மேலும் அவர் 1 வாரம் கால அவகாசம் கொடுத்தது சரியா. கால அவகாசத்தை குறைக்க வேண்டுமா என்று தீர்ப்பு அளிக்கும்.

எந்த அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டது. பொதுவாக குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க, கொண்டு வர வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க வேண்டும். ஆனால் நேற்றோ, நேற்று முதல் நாளோ அப்படி எந்த விதமான கூட்டமும் நடக்கவில்லை.

இது தொடர்பாக முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் . கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்த கடிதத்தை அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதத்தையும் இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டும்தான் இதில் முக்கியம்.

இந்த கடிதங்கள் இந்த வழக்கின் போக்கை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது . இது தொடர்டைய மற்ற ஆதாரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் சமர்ப்பிக்கும். இந்த நிலையில் இந்த ஆதாரங்களை விசாரித்துவிட்டு, அதன் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும்.

Comments