
பாத்திமாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் கேரளாவில் வலுத்து வருகின்றன.. அதன் தாக்கம் தமிழகத்திலும் தொத்திக் கொண்டு தீவிரமாகி வருகிறது.
இந்த விவகாரம் பெரிதாக எழ தொடங்கியபோதே, சோஷியல் மீடியாவில் 'ஜஸ்டிஸ் ஃபார் பாத்திமா' என்ற பெயரில் பதிவுகளையும் பொதுமக்கள் போட்டு வருகிறார்கள்.
தமிழக அரசின் போலீஸ் விசாரணை ஒரு பக்கம் மிகமிக துரிதமாக நடந்து வந்தாலும், மாணவர்கள் தரப்பினை சமாதானம் செய்ய முடியவில்லை. "என் மகள் இறந்து இத்தனை நாள் ஆகியும் ஐஐடி நிர்வாகம் ஒரு வருத்தத்தைகூட சொல்லவில்லை என்று பாத்திமாவின் அப்பா செய்தியாளர்களிடம் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
அந்த சமயத்தில்தான் ஐஐடி நிர்வாகம் தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகி, "விசாரணைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பு தருகிறோம்.. நிர்வாகத்தை பற்றி சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துக்கள் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது.. தவறான தகவலை பதிவிட வேண்டாம்" என்று கேட்டு கொண்டனர்.
இந்த நிலையில் 2 மாணவர்கள் சென்னை ஐஐடி நுழைவாயில் முன்பு உட்கார்ந்து இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மட்டுமில்லை.. மாணவர்களின் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் ஐஐடி வளாகத்தில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.
சென்னை ஐஐடியில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. ஆனால் 2016 முதல் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களின் தற்கொலைகளுக்கு வெவ்வேறு காரணம் இருந்தாலும் கூட அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் நடக்கிறது? இதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களின் எண்ணமும்!
Comments