ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்கள்... தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்

 2 andhara women stopped near sabarimala for age problem சபரிமலை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்களை இன்று கேரள போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வருவதற்கு ஆண்டாண்டு காலமாக தடை இருந்து வருகிறது. இந்த தடையை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன்படிஅனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என்ற நிலை உருவானது.

இந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அமல்படுத்த ஆளும்இடதுசாரி அரசு முயன்றது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடந்த ஆண்டு சபரிமலை சீசனில் பெரும் போராட்டம், வன்முறை, பதற்றம் என்று நீடித்து இருந்தது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ளது. அதேநேரம் பெண்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு சபரிமலைசீசனில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என கேரள அரசு அறிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களை மட்டுமே அனுமதிப்போம் என்றும் அறிவித்தது. இதன்படி நேற்று சபரிமலைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சூழலில் இன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்களை இன்று கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். நிலக்கலில் பேருந்தில் போலீஸ் சோதனை நடத்தியதில் 2 பெண்களிடம் இருந்து வயது சான்றிதழை சரிபார்க்கும் போது 50 வயது குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் சபரிமலைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

Comments