களைகட்டிய விழா.. மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு.. ஸ்டாலின் பங்கேற்பு!

Uddhav Thackeray sworn in as Maharashtra CM today மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி டிஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார்.

மும்பை சிவாஜி பூங்காவில் இன்று நடைபெற்ற விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். அதேபோல் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபியின் ஜெயந்த் பாட்டில், சஹான் புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலாசாகிப் தோரட், நிதின் ராவத் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். அதேபோல் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

முன்னதாக டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

சிவசேனாவின் சார்பில் ஏற்கனவே மனகோர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். சிவசேனாவின் 3-வது முதல்வர் உத்தவ் தாக்கரே.

இதனிடையே முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவி ஏற்புவிழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். ஆனால் அவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments