
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தன்னுடைய பலத்தை நிரூபிக்க தீவிரமாக தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவிற்கு நவம்பர் 30ம் தேதி ஆளுநர் பகத் சிங் நேரம் கொடுத்தார்.
ஆனால் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்று சிவசேனா கூறி வருகிறது. மேலும் பாஜக ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நேற்றும், இன்று விசாரணை நடந்தது.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா வழக்கில் நாளை முக்கியமான திருப்பங்கள் நடக்கும், அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று இரவு செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடத்த இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் வென்றது. இதில் சிவசேனாவிற்கு 45 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 57 சிவசேனா எம்எல்ஏக்கள் 49 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. பாஜகவுடன் இணைந்து இருக்கும் அஜித் பவாருக்கு 4 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவலா இருக்கிறது.
இந்த நிலையில்தான் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் இரவு 7 மணிக்கு அணிவகுப்பு நடத்தினார்கள். மும்பையில் அவர்கள் இருக்கும் ஹயாத் ஹோட்டலிலேயே இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக சொகுசு பேருந்தில் பல்வேறு ஹோட்டல்களில் இருந்து அவர்கள் ஹயாத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மொத்தம் 162 சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் இதில் கலந்து கொண்டனர். நாங்கள் எல்லோரும் சிவசேனாவிற்குதான் ஆதரவு அளிக்கிறோம். அவர்கள் கூட்டணிக்குத்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிப்போம் என்று இதில் 162 ஏக்களும் உறுதி மொழி எடுத்தனர்.
மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நிலவி வரும் நிலையில் முதல்முறையாக சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றி இப்படி பேசி உள்ளனர். தங்கள் பலத்தை மக்களிடம் நிரூபிக்க சிவசேனா இப்படி செய்துள்ளது. இதனால் பாஜக எப்படி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments