
ஆப்பிரிக்காவிலுள்ள ஸ்வாஸிலாந்து நாட்டின் மன்னராக இருந்து வருபவர் மூன்றாம் ஸ்வதி. ஸ்வாஸி அரச பரம்பரையை சேர்ந்த இவர் சுகபோகமாக வாழ்ந்து வருகிறார். தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு இடையே உள்ளது ஸ்வாஸி நாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த ஸ்வாஸி நாட்டின் மக்கள் பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றனர்.
இந்த சூழலில், மன்னர் செய்த காரியம்தான் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஆம், மூன்றாம் ஸ்வதி மன்னருக்கு 15 மனைவிகள் மற்றும் 23 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.
இந்த 19 ரோல்ஸ்ராய்ஸ் செடான் ஆடம்பர கார்களையும் இறக்குமதி செய்து வாங்குவதற்காக இந்திய மதிப்பில் ரூ.175 கோடியை அவர் செலவழித்துள்ளாராம். ஒவ்வொரு மனைவியும் விரும்பியவாறு பல்வேறு கூடுதல் வசதிகளுடம் இந்த கார்களில் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமல்ல, தனக்காக ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் சொகுசு எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து வாங்கி இருக்கிறார். அந்த காரில் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏராளமான கஸ்டமைஸ் பணிகளையும் அவர் செய்து வாங்கி இருக்கிறார்.
இத்துடன் நின்றதா இவரது ஆடம்பரம் என்றால், அதுதான் இல்லை. தனது பிள்ளைகள் மற்றும் ஸ்வாஸி அரச பம்பரையினர் பயன்பாட்டிற்காக 120 புதிய பிஎம்டபிள்யூ சொகுசு செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களையும் ஆர்டர் செய்துள்ளாராம்.
இந்த புதிய கார்கள் தவிர்த்து, மன்னர் மூன்றாம் ஸ்வதியிடம் ஏற்கனவே 20 மெர்சிடிஸ் மேபக் புல்மேன் கார்களும், ஒரு மேபக் 62 கார் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார்கள் உள்ளனவாம். இதுதவிர்த்து, சொந்த பயன்பாட்டிற்காக சில தனி விமானங்களும் உள்ளன.
இந்த கார்களை வாங்குவதை விட இந்த கார்களை பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும், இத்தனை கார்களை பராமரிப்பதற்காக தனி சர்வீஸ் மையம் தேவைப்படும். அதாவது, அரண்மனையில் இருக்கும் வாகனங்களுக்காக மட்டும் தனி சர்வீஸ் மையம் அமைக்க வேண்டி இருக்கும்.
வாகனங்களை டெலிவிரி கொடுப்பதற்கான விசேஷ டிரக்கில் 19 ரோல்ஸ்ராய்ஸ் செடான் கார்களும், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியும் மன்னர் வசம் டெலிவிரி கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட படங்கள் வீடியோ வெளியாகி இருக்கின்றன.
டிரக்கில் இருந்து இறக்கப்பட்ட கார்கள் மன்னர் இருப்பிடத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல வண்ணங்களில் சாலையில் அந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ரதம் போல செல்லும் காட்சிகள் பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இதனிடையே, மன்னர் இவ்வளவு கார்களை வாங்கிய விவகாரத்தை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தை அந்நாட்டு பிரதமர் அம்புரோஸ் நியாயப்படுத்தி உள்ளார். அதாவது, நாட்டின் அரசு விதிகளின்படியே மன்னருக்கு புதிய வாகனங்கள் வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மன்னரின் பழைய கார்கள் 5 ஆண்டுகள் பழமையாகிவிட்டதால், புதிய கார்களை வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்நாட்டில் 63 சதவீத மக்கள் வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.
மேலும், மோசமான பொருளாதார நிலை காரணமாக, ஆங்காங்கே அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. அரசு அலுவலங்கள் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. இந்த சூழலில், மன்னரின் இந்த ஆடம்பர செலவு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
ஸ்வாஸிலாந்து மன்னர் 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கியிருப்பதே மலைக்க வைக்கிறது. ஆனால், உலகிலேயே அதிக கார் வைத்திருப்பவர் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். வாழ்க்கையில் ஒரு சிறிய காரையாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் சிறியதாக கருதப்படும் இந்த கனவை கூட பெரும்பாலானோரால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது.
அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் இங்கே ஒருவர் தான் அணியும் உடையின் நிறத்திற்கு மேட்ச் ஆகும் நிறமுடைய கார்களை மட்டுமே பயன்படுத்தும் வித்தியாசமான பழக்கத்தை வைத்துள்ளார்.
புருனே நாட்டின் சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா என்பவர்தான் அவர். மிகவும் ஆடம்பரமான முறையில் வாழ்க்கை நடத்தி வரும் ஹஸ்ஸனல் போல்கியா, கார்களை வாங்குவதில், அதுவும் குறிப்பாக விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இவரிடம் 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன! உலகிலேயே அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் நபர் என்ற பெருமைக்கும், சாதனைக்கும் சொந்தக்காரர் ஹஸ்ஸனல் போல்கியாதான். இதுமட்டுமல்லாமல் அவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.
574 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களையும், 452 ஃபெராரி கார்களையும், 382 பென்ட்லீ கார்களையும், 209 பிஎம்டபிள்யூ கார்களையும், 179 ஜாகுவார் கார்களையும் புருனே சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா சொந்தமாக வைத்துள்ளார்.
கொஞ்சம் இளைப்பாறி கொள்ளுங்கள். இதுதவிர 21 லம்போர்கினி கார்களும், 11 அஸ்டன் மார்டின் கார்களும் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் உள்ளன. ஆக மொத்தம் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது!
புருனே சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் உள்ள மொத்த கார்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2.78 லட்சம் கோடி ரூபாய்!!! கார்களை வாங்குவதற்காக மட்டும் இவ்வளவு தொகையை செலவிட்ட உலகின் ஒரே நபர் நிச்சயமாக ஹஸ்ஸனல் போல்கியாவாக மட்டுமே இருக்க முடியும்.
ஹஸ்ஸனல் போல்கியாவின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் 10 கால்பந்து மைதானங்களை காட்டிலும் மிகப்பெரியது! அவரிடம் உள்ள கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று 24 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் இந்த காரின் விலை மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய். சொந்தமாக ஒரு கார் கூட வாங்க முடியாமல் பலர் தவித்து கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஹஸ்ஸனல் போல்கியா போன்றவர்கள் ஆடம்பரத்திற்காக தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை கொண்டு, கார்களை அலங்கரித்து வருகின்றனர். அதே சமயம் விளம்பரத்திற்காக இதனை செய்யும் கலாச்சாரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதுதான் டாடா நானோ கோல்டு ப்ளஸ் (Tata Nano GoldPlus) கார். டாடா நானோ கோல்டு ப்ளஸ் கார் உருவாக்கப்பட்டதன் பின்னணியும் கூட சுவாரஸ்யமானதுதான்.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வழங்க வேண்டும் என்ற டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கடும் முயற்சியால் உருவான கார்தான் நானோ. நானோ கார் குறித்த அறிவிப்பை ரத்தன் டாடா வெளியிட்டபோது, பல மேற்கத்திய நாடுகள் அவரை ஏளனம் செய்தன.
ஆனால் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வழங்கியே தீருவது என்ற தனது கனவு திட்டத்தில் ரத்தன் டாடா மிகவும் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக டாடா நானோ கார் விற்பனைக்கு வந்தது. அத்துடன் உலகில் விற்பனையாகும் மிக மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
நானோ குறித்த அறிவிப்பு வெளியானபோது, 3 லட்சம் முன்பதிவுகள் குவிந்தன. ஆனால் பல காரணங்களால் முதலில் முன்பதிவு செய்திருந்த ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே 1 லட்ச ரூபாய் என்ற விலையில் நானோ கார் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின் அதன் விலை உயர்ந்தது எல்லாம் தனிக்கதை.
முன்னதாக இந்தியாவின் நகை தயாரிப்பு பாரம்பரியம் 5 ஆயிரம் ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக, மிக விலை உயர்ந்த உலோகங்களை கொண்டு, டாடா நானோ காரை வடிவமைத்தது கோல்டு ப்ளஸ் ஜூவல்லரி நிறுவனம்.
இதில், 80 கிலோ தங்கம் (22 காரட்), 15 கிலோ வெள்ளி மற்றும் வைரம், மாணிக்க கற்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்த டாடா நானோ கோல்டு ப்ளஸ் காரின் விலை 22 கோடி ரூபாய்களாக உயர்ந்தது.
ஆனால் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக நானோ கோல்டு ப்ளஸ் கார் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். விளம்பரத்திற்காக மட்டுமே தங்கம், வைரம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டது.
Comments